ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் கைது: சிறையில் இருந்தே திட்டம் தீட்டி கொடுத்தது அம்பலம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வடசென்னையை ஆட்டிப்படைத்த ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். தனது மகன் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால், சிறையில் இருந்தே திட்டம் தீட்டி கொடுத்தது அம்பலமாகி உள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் முடிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை முதலில் கைது செய்தனர். இதில், திருவேங்கடம் போலீஸ் கஸ்டடியில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன் பிறகு கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தோட்டம் சேகரின் மனைவியும், அதிமுக வழக்கறிஞருமான மலர்க்கொடி, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், தமாகாவை சேர்ந்த ஹரிகரன், பாஜ பிரமுகர் அஞ்சலை உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.  அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரன் மீது செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை அஸ்வத்தாமனுடன் சேர்த்து 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 23வது நபராக நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல தகவல்கள் இந்த கொலையில் வெளிவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* யார் இந்த தாதா நாகேந்திரன்
நாகேந்திரன், வியாசர்பாடியை சேர்ந்தவர். உஷா, விசாலாட்சி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்து தற்போது ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2வது மகன் அஜித் ராஜ் பாஜ நிர்வாகியாக உள்ளார். மகள் ஷாலினி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரவுடி நாகேந்திரன் ஆரம்ப காலகட்டத்தில் வெள்ளை ரவியுடன் குத்துச்சண்டை பயின்று வந்தார்.

பிரபல ரவுடி சேராவின் வலதுகரமாக இருந்த சுப்பையா என்பவரை, 1991ல் நாகேந்திரன், வெள்ளை ரவியுடன் சேர்ந்து வெட்டியுள்ளார். ஆனால் சுப்பையா படுகாயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிழைக்க கூடாது என்ற நோக்கத்தில் நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சுப்பையாவை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்தார்.

அதிமுக பேச்சாளர் ஸ்டான்லி சண்முகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 1997ல் சத்திய மூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் வைத்து நாகேந்திரன் அவனது கூட்டாளி ரமேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஸ்டான்லி சண்முகத்தை கொலை செய்தார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த நாகேந்திரன், வியாசர்பாடி பகுதியில் சாராயம் விற்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்கும் இல்லாமல்லி என்பவருக்கும், நாகேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இதில் நாகேந்திரன் இல்லாமல்லியை வெட்டினார். இதில் இல்லாமல்லி உயிர் தப்பினார். இதையடுத்து நாகேந்திரனால் பாதிக்கப்பட்ட இல்லாமல்லி மற்றும் ஸ்டான்லி சண்முகத்தின் ஆட்கள் நாகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டனர். முதற்கட்டமாக, 1999ம் வருடம் நாகேந்திரனின் தம்பி பிர்லா போஸ் என்பவரை கொலை செய்தனர்.

ஸ்டான்லி சண்முகம் என்பவரை கொலை செய்த வழக்கில் 1999ம் வருடம் நாகேந்திரனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று முதல் நாகேந்திரன் சிறையில் இருந்தவாறே, வடசென்னையில் பல வேலைகளை செய்து வந்தார். சிறையில் இருந்தபடியே தனது தம்பி கொலைக்கு பழி வாங்கும் விதமாக 2002ம் ஆண்டு தேசிங்கு என்பவரையும் 2003ம் ஆண்டு ஸ்டான்லி சண்முகத்தின் தம்பி பிரபா என்பவரையும் கொலை செய்தார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் 2003ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் நாகேந்திரனுக்கு தண்டனை உயர்த்தி, ஆயுள் தண்டனை வழங்கியது. கிஷ்டா (எ) ராதாகிருஷ்ணன், பாளையம், வேலூரை சேர்ந்த வேலு, தென்னரசு, பிரபா, ரஞ்சித், பொக்கை ரவி, பாக்சர் முரளி, விஜயதாஸ் உள்ளிட்டோரின் கொலைகளுக்கும் நாகேந்திரன் மூளையாக செயல்பட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லீரல் பாதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, மீண்டும் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சிறையில் கைது ஆணையை வாங்க மறுத்து நாகேந்திரன் அடம்
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர். அதற்கான ஆணையை சிறையில் உள்ள நாகேந்திரனிடம் போலீசார் நேற்று வழங்கியபோது அதை வாங்க மறுத்த ரவுடி நாகேந்திரன் ‘இந்த கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எதற்காக என்னுடைய மகனை கைது செய்தீர்கள்’ என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அதற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் அளித்துவிட்டு திரும்பினர்.

* பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் அழிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு வந்தனர். 2 நாட்டு வெடிகுண்டுகளும் கொண்டு வந்துள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல், 2 நாட்டு வெடிகுண்டுகளை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு சென்றது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்திபோது மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகளையும் அப்புறப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியிலிருந்து 10.45 மணி வரை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 5 நாட்டு வெடிகுண்டுகளையும் சென்னை பெருநகர 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் உத்தரவின்பேரில், செயலிழக்க வைக்கும் பணி செம்பியம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சிரஞ்சீவி முன்னிலையில் நடந்தது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கின் உட்பகுதியில் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் துறை ஆய்வாளர் முத்துமணி தலைமையில் 5 நாட்டு வெடிகுண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டன. இதையொட்டி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் கைது: சிறையில் இருந்தே திட்டம் தீட்டி கொடுத்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: