மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி விரைவில் தொடக்கம்: சென்னை மாநகராட்சி

சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள் முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகள் ஒதுக்கீடு திங்கள் முதல் தொடங்கப்படும். லூப் சாலையின் இரு புறமும் மீன் வியாபாரம் நடப்பதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு என ஐகோர்ட் தாமாக வழக்கு தொடர்ந்தது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இந்த லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகள் மற்றும் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து மெரினா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி கடைகளை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் மீனவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார்.

மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது. சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மாநகராட்சி சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விற்பனை சந்தையில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 366 கடைகளைக் கொண்ட இந்த சந்தையில் சிசிடிவி கேமரா, கழிவறை, மீன்களை வெட்டி சுத்தம் செய்ய தனிப்பகுதி, பைக் மற்றும் கார் பார்க்கிங் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி விரைவில் தொடக்கம்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: