பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்தது

கதிஹார்: பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் பாக்கிய சுகாயே பஞ்சாயத்து பகுதியை மாவட்ட தலைமை நகரத்துடன் இணைக்க ஊரகப் பணித் துறை மூலம் கங்கை நதியின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் எந்தபாதிப்பும் இல்லை. இந்த பாலம் இடிந்தது தொடர்பாக கலெக்டர் மனேஷ்குமார்மீனா கூறுகையில்,’ கங்கையின் குறுக்கே பாலம் கட்டும் பணி சமீபத்தில் தொடங்கியது. சிறிய பாலத்தின் இரண்டு தூண்கள் இடிந்து விழுந்தன. ஆற்றின் நீரோட்டத்தில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதன் காரணமாக இரண்டு தூண்களும் இடிந்து விழுந்திருக்கலாம். இந்த விவகாரம் மேலும் ஆய்வு செய்யப்படுகிறது’ என்றார். கதிஹார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிரஜ் குமார் சிங் கூறுகையில், ‘கட்டுமானத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. கட்டுமானம் சமீபத்தில் தொடங்கியது. இரண்டு தூண்கள் மட்டுமே இடிந்து விழுந்தன. ’ என்றார். பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்துள்ளது .

The post பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: