நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு பின் ராணுவம் முகாம்களுக்கு திரும்பியது: அரசு சார்பில் வழியனுப்பு விழா

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 30ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காணப்படாத 44 உடல்கள் மற்றும் 176 உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பின்னர் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

சன் ரைஸ் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் ஒரு உடல் பாகம் கிடைத்ததால் நேற்றும் அங்கு மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். வயநாட்டில் சூரல்மலை மற்றும் முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்ட கடந்த 30ம் தேதியன்றே மீட்புப் பணிகளுக்காக ராணுவம் களத்தில் இறங்கியது. கோழிக்கோடு, பெங்களூரு, கண்ணூர் முகாம்களில் இருந்து ராணுவமும், சூலூரிலிருந்து விமானப்படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

பெங்களூருவிலிருந்து வந்த ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் தொடர்ந்து பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் சூரல்மலையில் 24 மணி நேரத்தில் ஒரு இரும்புப் பாலத்தையும் அமைத்தனர். கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்திலுள்ள புஞ்சிரிமட்டம் மற்றும் சூரல்மலை, முண்டக்கை, சூஜிப்பாறை உள்பட இடங்களில் 500 ராணுவ வீரர்கள் மிகவும் சாகசமாக செயல்பட்டு ஏராளமான உடல்களை மீட்டனர். இனி உடல்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லாததால் 10 நாள் மீட்புப் பணிக்கு பின்னர் ராணுவத்தினர் நேற்று வயநாட்டிலிருந்து தங்களது முகாம்களுக்கு திரும்பினர். அவர்களுக்கு கேரள அரசு சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

* பிரதமர் நாளை வருகை : பினராயி விஜயன் தகவல்
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டு மக்களுக்கு ஒரு விரிவான மறுவாழ்வு திட்டம் தான் தேவையாகும். ஒன்றிய அரசு சாதகமாக இதில் முடிவெடுக்கும் என்று கருதுகிறோம். சனிக்கிழமை (10ம் தேதி) பிரதமர் மோடி வயநாடு வருகிறார். வயநாட்டுக்கு அவர் தேவையான உதவிகள் செய்வார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* நிவாரண பொருட்கள் அனுப்ப வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு மாவட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்தும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. பெருமளவு நிவாரணப் பொருட்கள் குவிந்ததால் அதை வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை யாரும் அனுப்ப வேண்டாம் என்று வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ தெரிவித்துள்ளார்.

The post நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட 10 நாட்களுக்கு பின் ராணுவம் முகாம்களுக்கு திரும்பியது: அரசு சார்பில் வழியனுப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: