வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மத சுதந்திரத்தில் தலையிடவில்லை என ஒன்றிய அமைச்சர் விளக்கம்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

டெல்லி : வக்ஃப் வாரியத்தை சிலர் தங்களது பிடியில் வைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டி உள்ளார். மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜ தாக்கல் செய்தார். ஆனால் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “வரலாறு படைக்கும் திருத்தங்களுடன் வக்ஃப் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மத சுதந்திரத்தில் தலையிடவில்லை. வக்ஃபு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. தற்போதைய திருத்தத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். யாருடைய உரிமைகளை பறிக்க சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை.

1995ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் முழுமையாக இல்லை. காங்கிரஸ் முடிக்காத வேலையை நாங்கள் முடித்து வைக்கிறோம். நலிந்த மக்களுக்கு வலுவூட்டவே வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. உரிமைகளை பெறாதவர்களுக்கு உரிமை வழங்கவே வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மசோதாவால் கோடிக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பலன் பெறுவார்கள். மசோதாவை எதிர்த்தால் வரலாறு ஒரு போதும் உங்களை மன்னிக்காது,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே வக்ஃபு சட்டத்திருத்தம் குறித்த ஒன்றிய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதற்கு கடிந்து கொண்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, கேள்வி எழுப்பிவிட்டு பதிலைக் கேட்காமல் வெளிநடப்பு செய்வது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது, என்றார்.

The post வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மத சுதந்திரத்தில் தலையிடவில்லை என ஒன்றிய அமைச்சர் விளக்கம்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: