பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?

?பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

தடைகள் அத்தனையும் தூள் தூளாகிவிட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். சிறு திருத்தம். பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பதாக நீங்கள் எண்ணுவது தவறு. பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட சிதறு தேங்காய் உடைப்பார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு தேங்காய், பயணத்தைத் துவக்கும்போது ஒரு தேங்காய், எரிமேலி சாஸ்தா ஆலயத்தில் ஒரு தேங்காய், கன்னி மூலை கணபதி சந்நதியில் ஒரு தேங்காய், பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு முன்னால் ஒரு தேங்காய், பயணம் முடித்து திரும்பவும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு தேங்காய் என்று சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள். கருப்பண்ண சுவாமிக்கும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். திருஷ்டி சுற்றி போடும்போதும் சிதறு தேங்காய் உடைப்பார்கள். மொத்தத்தில் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் தோஷம் பீடித்திருந்தாலும் சரி, காரியத்தடை ஆக இருந்தாலும் சரி, எல்லாவிதமான இடையூறுகளும் தகர்ந்து எளிதில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம். விக்னம் எனும் தடையை நீக்குபவன் விக்னேஸ்வரன் என்பதால் பெரும்பான்மையாக பிள்ளையார் கோயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாகி இருக்கிறது.

?அன்பே சிவம் என்று சொன்னால் விஷ்ணுவை எப்படிச் சொல்வது?
– ராஜ. மூர்த்தி, சேலம்.

சிவம் என்ற வார்த்தைக்கு ஈஸ்வரன் என்ற பொருள் மட்டும் கிடையாது. மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முக்தி, கடவுளின் அருவுருவ நிலை என்று பல்வேறு அர்த்தங்கள் அந்த வார்த்தைக்குள் உண்டு. ஈஸ்வரன் உருவமின்றி அருவுருவமாக லிங்கத் திருமேனியாக காட்சியளிப்பதால் அவரை சிவன் என்று அழைக்கிறார்கள். குணங்களிலே மிக உயர்ந்த குணம் அன்பு என்றும் இந்த அன்பினைக் கொண்ட மனிதனே கடவுளின் சாயலைக் கொண்டவன் என்றும் எல்லா மதங்களும் கூறுகின்றன. எங்கெல்லாம் அன்பு வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவனின் நிழல் படிகிறது என்கிறார் புத்தர். அவ்வளவு ஏன், சிவன், விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி என்று எந்த தெய்வத்தின் அஷ்டோத்ர நாமாவளியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஓம் சிவாயை நம: என்ற வார்த்தை இடம் பிடித்திருப்பதைக் காண இயலும். “சிவாய விஷ்ணுரூபாய சிவரூபாய விஷ்ணவே” என்ற மந்திரத்தை அடிக்கடி காதால் கேட்கிறோமே. நாம் விஷ்ணு என்ற வார்த்தையைக் கேட்டதும் பெருமாள் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். விஷ்ணு என்ற பதத்திற்கு ஸர்வவ்யாபின: அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் அன்புதான் கடவுளின் அருவுருவ நிலை, அதுவே முக்தியைத் தரக்கூடியது என்பதே நிஜம். ஆக அன்பேசிவம் என்ற வார்த்தைக்கு அன்புதான் நமக்கு உயர்வை அளிக்கக் கூடிய சக்தி, அந்த சக்தியே கடவுள் என்று பொருள் காணவேண்டும். அத்தகைய உயர்வான இறைசக்தியைக் குறிப்பிடுகின்ற பொதுவான வார்த்தையே சிவம் என்பதே
உங்கள் கேள்விக்கான விளக்கம்.

?13 என்ற எண் அதிர்ஷ்டமில்லாத எண் என்று கருதப்படுவது ஏன்?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

இது முற்றிலும் மூட நம்பிக்கையே. இதற்கு சாஸ்திர ரீதியாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஒன்றும் மூன்றும் இணைந்து வரும் நான்கு என்பது ராகுவின் எண் என்றும் இதனால் அந்த எண் அசுர சக்தியை உடையது என்றும் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதுபோக திரைப்படங்களின் வாயிலாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களின் மூலமாக அந்த எண்ணுடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி நடமாடும் என்ற மூட நம்பிக்கையும் பரப்பப்பட்டு உள்ளது. உண்மையில் எல்லா எண்களுமே நன்மையைச் செய்யக்கூடியதுதான். அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் அவரவர் செய்து பூர்வ ஜென்ம கர்மாவினைப் பொறுத்தே அமையும்.

?ஒரு சில ஜோதிடர்கள் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும்தான் திருப்பதிக்கு செல்லவேண்டும், மற்ற ராசிக்காரர்கள் திருப்பதிக்கு செல்லக்கூடாது என்கிறார்களே, இது சரியா?
– ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு.

சர்வ நிச்சயமாக சரியில்லை. இது முற்றிலும் தவறான கருத்து. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் திருமலைவாசனை ராசி நட்சத்திர பேதமின்றி எல்லோரும் சென்று தரிசிக்க வேண்டும். திருப்பதிக்கு செல்லக்கூடாது என்று அறியாமல் சொல்வது கூட கடுமையான தோஷத்தை உண்டாக்கிவிடும். இந்த கேள்வியையே மனதில் இருந்து அடியோடு அழித்துவிடுங்கள். இதுபோன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொள்பவர்களின் மனதில் இறைவன் புகுந்து அவர்களை நல்வழிப்படுத்தட்டும்.

?இறந்தவர்களின் நேரம் சரியில்லை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் வீட்டை அடைத்துவிட்டு மூன்று மாதமோ ஆறு மாதமோ வெளியேறிவிட வேண்டும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்களே, இது சரியா?
– ஜி. குப்புசாமி, வேலூர்.

இதற்கு தனிஷ்டா பஞ்சமி என்று பெயர். இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள் என்று தனிஷ்டா பஞ்சமியைப் புரியும்படியாக பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். ‘தனிஷ்டா’ என்ற சொல்லுக்கு அவிட்டம் என்று பொருள். அவிட்டம் நட்சத்திரம் முதலாக தொடர்ந்து வரும் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உயிர் துறந்தால் ஆறுமாத காலம் வரை வீட்டினைப் பூட்டி வைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு குறிப்பிட்ட காலம் வரை வீட்டினைப் பூட்டி வைக்க இயலாது என்பதால் இதற்கு பரிகாரமும் சொல்லப்பட்டிருக்கிறது. இறந்தவரின் கரும காரியங்கள் முடிந்த கையோடு வெங்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விடுத்து தானம் செய்ய வேண்டும். ஆறு மாத காலம் வரை உயிர் பிரிந்த இடத்தில் (வீட்டில்) தினசரி தீபம் ஏற்றி வைத்தாலே போதுமானது. வீடு மூட வேண்டிய அவசியமில்லை.

?ஒருவர் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதி மறையக்கூடாது, இதனால் திருமணம் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறதே?
– ஜெயக்குமரன், திருநெல்வேலி.

எந்த கிரகமும் மறையாது, அவை தன்னுடைய பாதையில் வெளிப்படையாக சுற்றிக்கொண்டுதான் இருக்கும். ஜாதகத்தில் 6, 8, 12 முதலான இடங்களை மறைவு ஸ்தானங்கள் என்று சொல்வதன் பொருள் என்னவென்றால் அதற்கான பலனை நேரடியாகச் சொல்லாமல் சற்று மறைத்து இலைமறை காய்மறையாக பலனைச் சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினார்கள் பெரியவர்கள். உதாரணத்திற்கு குடும்ப ஸ்தான அதிபதி லக்னத்திற்கு 12ம் வீட்டில் அமர்ந்தால் அந்த ஜாதகர் குடும்பத்தைப் பிரிந்து தொலை தூரத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார் என்பது பொருள். நம் கண் முன்னே பலரும் இதுபோன்ற பணியில் இருப்பதைப் பார்த்திருப்போம். திருமணம் தள்ளிப்போவதற்கும் குடும்ப ஸ்தான அதிபதி 6, 8, 12ல் அமர்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. களத்ர ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழாம் பாவகம்தான் திருமணத்தை தீர்மானிக்கும்.

The post பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: