இந்த பரபரப்பான சூழ்நிலையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (9ம் தேதி) காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என்று நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தபிறகு சுமார் 2 மாதத்திற்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை (9ம் தேதி) காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது. இத்தகைய திடீர் அறிவிப்பினால் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு உள்கட்சி பிரச்னையால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் குழப்பத்தில் உள்ளதையே இது காட்டுவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமைக்கு எதிராக பலரும் பேசுவார்கள் என்ற பயம் காரணமாகவே கூட்டம் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே நேற்று பிற்பகல் அதிமுக தலைமை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
The post நாளை நடைபெற இருந்த கூட்டம் திடீர் ரத்து: மாவட்ட செயலாளர்கள் உள்பட அதிமுகவினர் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.