தொடர் திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த 3 பேர் ஆயுதங்களுடன் கைது 15 சவரன் நகை பறிமுதல் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில்

ஆரணி, ஆக.7: ஆரணி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தஞ்சாவூரை சேர்ந்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்(74), விவசாயி. இவரது மனைவி சந்திரா(69). கடந்த 3ம் தேதி இருவரும் உணவு சாப்பிட்டு, வீட்டின் பின்புறம் கொசு வலை அமைத்த கதவை மட்டும் மூடிவிட்டு தூங்கினர். நள்ளிரவு ஒரு மணியளவில் முகமூடி அணிந்த வந்த மர்ம ஆசாமிகள் திடீரென சாந்தகுமாரின் வீட்டில் புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு, அவரது கணவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதேபோல், ஆரணி தச்சூர் புதிய காலனியை சேர்ந்தவர் உமாபதி(45), லாரி டிரைவர். இவரது மனைவி சிவகங்கை(36). கடந்த 4ம் தேதி இரவு உமாபதி தனது குடும்பத்துடன் உணவு சாப்பிட்டு வீட்டில் தூங்கினார். அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவை உடைத்து 10 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தகுமார், உமாபதி ஆகிய இருவரும் அளித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், விநாயகமூர்த்தி, எஸ்ஐக்கள் அருண்குமார், சுந்தரேசன், பயிற்சி எஸ்ஐக்கள் ஆகாஸ், ஆனந்தன், எஸ்எஸ்ஐக்கள் கன்ராயன், சங்கர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் விண்ணமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் எஸ்ஐ அருண்குமார், எஸ்எஸ்ஐ கன்ராயன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் சந்தேகப்படும்படி வந்த 3 பேரை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்சீசமங்கலம் சிவன் கோயில் உண்டியல் திருட்டு, மருசூர், தச்சூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து தாலிச்செயின், நகை, பணம் திருடிச்சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம், ராமநாதபுரம் அடுத்த மனோஜ்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(35), ரகுபிரசாத்(19), பாண்டுரங்கன்(70) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவர்கள் நகை திருட்டிற்கு பயன்படுத்திய பைக், முகக்கவசம், கை கிளவுஸ், கத்திகள், கத்திரிகோல் மற்றும் திருடிச்சென்ற 15 சவரன் நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தொடர் திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த 3 பேர் ஆயுதங்களுடன் கைது 15 சவரன் நகை பறிமுதல் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் appeared first on Dinakaran.

Related Stories: