தமிழ் சினிமா பாணியில் சடலத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்: உறவினர்கள் முற்றுகை

திருமலை: தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் சடலத்துக்கு சிகிச்சை அளிப்பதுபோல் நடித்து பணம் வசூலிப்பார்கள். இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள கார்ப்பரேட் தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் இறந்த உடலுக்கு சிகிச்சை அளித்து குடும்பத்தினரிடம் பணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதுபற்றிய விவரம் :
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரை சேர்ந்த வெங்கடேஷ்(50) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக ₹5.50 லட்சம் பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என டாக்டர்கள் கூறினர். இந்நிலையில் வெங்கடேஷை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்று யாராவது பார்த்தால் நோயாளிக்கு தொற்று பரவும் எனவே வெங்கடேசனை பார்க்க முடியாது என உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர். ஆனால் வெங்கடேஷுக்கு மேலும் சிகிச்சை தேவை என்றும் ₹4.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதனால் சந்தேகமடைந்த வெங்கடேஷின் உறவினர்கள், நேற்று முன்தினம் ஐசியூ கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இறந்தவருக்குத்தான் இவ்வளவு நாட்களாக பணம் வசூலித்து சிகிச்சை செய்து கொண்டிருந்தீர்களா? என கேட்டனர். அதற்கு டாக்டர்கள் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் மழுப்பலுடன் பதில் கூறினார்களாம். இதனால் வெங்கடேஷின் குடும்பத்தினர் டாக்டர்களை முற்றுகையிட்டு மருத்துவமனையை முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post தமிழ் சினிமா பாணியில் சடலத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்: உறவினர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: