மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 175 காவல் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள்: பயணிகளுக்கு ஆலோசனை வழங்கி உதவி

தாம்பரம், ஆக.4: தாம்பரம் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக நேற்று (3ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

எனவே, பயணிகளின் நலன்கருதி நேற்று முதல், வரும் 14ம் தேதி வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகின்றன. ஆனாலும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு ரயில் சேவை ரத்து குறித்த தகவல்கள் சரியாக தெரியாததால், அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அதோடு இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம், இரும்புலியூர் பேருந்து நிலையம், இந்துமிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், இதுகுறித்து தகவல் தெரியாத வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து கேட்டு எவ்வாறு செல்ல வேண்டும், எந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என பணியில் இருந்த போலீசார் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தனர். வெளி மாவட்ட மற்றும் மாநில பயணிகளின் வசதிக்காக ரயில்கள் ரத்து குறித்து பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைப்பதோடு, ஒலிபெருக்கியில் தகவலை அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 175 காவல் அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள்: பயணிகளுக்கு ஆலோசனை வழங்கி உதவி appeared first on Dinakaran.

Related Stories: