கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக ஆலத்தூர் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு: லாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருப்போரூர், ஆக.4: திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக மண் எடுக்கவும், ஏரியை ஆழப்படுத்தவும் அரசு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த 31ம் தேதி மேற்கண்ட ஏரியில் இருந்து மண் எடுத்துச்செல்ல லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் வந்தன. அப்போது, ஆலத்தூர் மற்றும் சிறுதாவூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மண் அள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் மண் அள்ள வாகனங்களும், பொக்லைன் இயந்திரமும் வந்தன. இதையறிந்த ஆலத்தூர் மற்றும் சிறுதாவூர் கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஏரியில் குவிந்தனர். ஏரியில் மண் அள்ளிச்சென்றால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும். ஏரி அருகே குடிநீர் கிணறு உள்ளதால் கிராமத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் என்றும், விவசாய பணி முடங்கி, விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் கூறி ஆலத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல், சிறுதாவூர் மக்கள், ஏற்கனவே சிறுதாவூர் ஏரியில் மண் எடுக்கும்போது சாலை சேதமாகி விபத்துக்கள் நடந்தன. இந்நிலையில் 25 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ₹28 கோடி மதிப்பில், தற்போது சிறுதாவூர் வழியாக, திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 50 சதவீதம் கூட சாலைப்பணி நிறைவடையவில்லை. ஏரியில் மண் எடுக்கும் லாரிகள் இச்சாலை வழியாக சென்றால் சாலை சேதமடையும். அரசு இதனை கவனத்தில்கொண்டு மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால் மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

The post கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக ஆலத்தூர் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு: லாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: