செங்கம், ஆக. 3: நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் புனித நீராட மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் பயணம் செய்தனர். செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயில் மற்றும் சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு ஆடிப்பெருக்கு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பக்தர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் நேற்று பயணம் மேற்கொண்டனர். நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் புனித நீராடியும், ஆடு கோழி பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்தி பொங்கல் வைத்து மொட்டை அடித்து விருந்து சமைத்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து சாப்பிடுவார்கள். அதேபோல் புதுமண தம்பதிகள் புனித நீராடுவதும் வழக்கம். இதனால் இன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாட்டு வண்டிகளில் பயணம் செய்த பொதுமக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழா நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் புனித நீராட appeared first on Dinakaran.