இதன் பலனாக 12வது நிமிடத்தில் அபிஷேக் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 13வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் போட, முதல் கால் மணி நேர ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. அணிக்கு கிரெய்க் தாமஸ் 25வது நிமிடத்தில் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. டைவேளையின்போது இந்தியா 2-1 என முன்னிலையை தக்கவைத்தது. 3வது குவார்ட்டரின் தொடக்கத்திலேயே ஹர்மன்பிரீத் தனது 2வது கோலை பதிவு செய்து அசத்த (32வது நிமிடம்), இந்தியா 3-1 என முன்னிலையை மேலும் அதிகரித்தது.
இரு அணிகளும் கோல் முனைப்புடன் போராட… கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் முடிய 5 நிமிடம் எஞ்சியிருந்த நிலையில் கோவர்ஸ் பிளேக் அடித்த கோலால் (55வது நிமிடம்) ஆஸ்திரேலிய தரப்பு உற்சாகம் அடைந்தது. எனினும், தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்திய இந்தியா ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. 1972 மூனிச் ஒலிம்பிக் போட்டியில் இருந்து, ஒலிம்பிக் ஹாக்கியில் 52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 54 சதவீத நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எதிரணி பாதுகாப்பு அரணை ஊடுருவி பந்தை கடத்திச் செல்வதில் இந்தியா 20 முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், ஆஸி. தரப்பு 37 முறை தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் பி பிரிவில் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறிய நிலையில் (3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி), ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது (3 வெற்றி, 2 தோல்வி). காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.
The post 52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அசத்தல் appeared first on Dinakaran.