* மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு: பைனலில் மனு பாக்கர்; ஹாட்ரிக் பதக்கத்துக்கு வாய்ப்பு
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மனு பாக்கர் 590-24X புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். துல்லிய நிலையில் (பிரிசிஷன்) 294 புள்ளிகளைக் குவித்த மனு பாக்கர், அதிவேக முறையில் (ரேப்பிட்) 296 புள்ளிகளை அள்ளி அசத்தினார். தகுதிச் சுற்றில் ஹங்கேரி வீராங்கனை மேஜர் வெரோனிகா (592-27X) முதலிடம் பிடித்தார். மொத்தம் 40 பேர் பங்கேற்ற இப்போட்டியில் டாப் 8 வீராங்கனைகள் மட்டும் பைனலுக்கு முன்னேறினர். இந்தியாவின் ஈஷா சிங் (581-17X) 18வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள மனு பாக்கர், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபரப்பான இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
* வில்வித்தையில் ஏமாற்றம்
ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்காக அமெரிக்காவுடன் நேற்று மோதிய இந்தியாவின் அங்கிதா பகத் – திராஜ் பொம்மதேவரா இணை 2-6 என்ற கணக்கில் போராடி தோற்று பதக்க வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது. முன்னதாக, ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்த ஜோடி, அதிலும் 2-6 என்ற கணக்கில் கொரியாவின் லிம் சிஹையான் – கிம் வோஜின் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
* அரை டஜன் தங்கம்!
அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2வது தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டிகளில் அவர் இதுவரை 6 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் மட்டுமே சிமோனி 4 தங்கம், 1 வெண்கலம் வென்றுள்ளார். 2020 டோக்கியோவில் வெள்ளி, வெண்கலம் என சற்று பின்னடைவை சந்தித்த அவர், நடப்பு தொடரின் குழு மற்றும் ஆல்-ரவுண்ட் பிரிவுகளில் 2 தங்கத்தை முத்தமிட்டுள்ளார். இது தவிர உலக சாம்பியன்ஷிப்புகளில் 23 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என சிமோனியின் பதக்கவேட்டை பட்டியல் நீள்கிறது.
* மகளிர் 100 மீ. ஓட்டம்: அரையிறுதியில் ஷ-காரி ரிச்சர்ட்சன்
ஒலிம்பிக் தடகளம் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நேற்று களமிறங்கிய நடப்பு உலக சாம்பிய ஷ-காரி ரிச்சர்ட்சன் (அமெரிக்கா) 10.94 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அவருக்கு கடும் போட்டியாளராகக் கருதப்படும் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி-ஆன் பிரேசர் பிரைஸும் (10.92 விநாடி) அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால், இன்று நடைபெற உள்ள இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்படம்: ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள ஷ-காரியின் நக அலங்காரம்.
* அசால்ட் ஆறுமுகம் 007
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி அணியில் இடம் பெற்ற யூசுப் டிகெக், துல்லியமாக குறிவைக்க உதவும் சிறப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்ட படி அசால்ட்டாக சுட்டுத் தள்ளியது உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. டிகெட் (51 வயது) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் தான் இந்தியாவின் மனு – சரப்ஜோத் ஜோடி வெண்கலம் வென்றது.
The post ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் – 2024: பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சென் appeared first on Dinakaran.