வேலூர் விஐடியில் 39வது பட்டமளிப்பு விழா மாணவர்கள் சுயதொழில் தொடங்க வேண்டும்: தேசிய தொழில்நுட்பக்கழக தலைவர் பேச்சு

சென்னை: வேலூர் விஐடி பல்கலைக்கழக 39வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். விழாவில், 8,205 மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பட்டங்கள் பெற்றனர். இவர்களில் ரேங்க் பெற்ற 65 பேர் தங்க பதக்கங்களை பெற்றனர். 357 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய கல்வி தொழில்நுட்பக்கழக என்இடிஎப் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது: தொழிற் நிறுவனங்கள், பல துறை அறிவுத்திறன் கொண்ட இளைஞர்களையே நாடுகின்றன. இந்தியாவில் கடந்த 2014ல் 400 ஸ்டார்ட் அப் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போது 1.50 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. அந்தளவுக்கு நாட்டில் சுயதொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயதொழில்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட முடிவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடவும் முடியும். எனவே, மாணவர்கள் அதிகளவில் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்ட வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவும் மருத்துவ படிப்பை போல் பட்டப்படிப்புகளுக்கும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் மாற்றத்துக்கு ஏற்ப புதிய பட்டப்படிப்புகளை கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5வது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருவாயில் 136வது இடத்திலும், மனிதவள மேம்பாட்டில் 134வது இடத்திலும் உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்குப்படி இந்தியாவில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 14 கோடி இளைஞர்களில் 4 கோடி பேர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர். அதிகப்படியான இளைஞர்கள் உயர்கல்வி பெற்றால் மட்டுமே நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பொருளாதார வேறுபாடுகளை களையவும் முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கர்நாடக மாநில வளர்ச்சிக் கழகத் தலைவர் டி.ஆர்.பரசுராமன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 

The post வேலூர் விஐடியில் 39வது பட்டமளிப்பு விழா மாணவர்கள் சுயதொழில் தொடங்க வேண்டும்: தேசிய தொழில்நுட்பக்கழக தலைவர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: