கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு


சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். மேயர் பிரியா முன்னிலை வகித்தார். இதில் சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கொளத்தூர் தொகுதியில் நடந்து வரும் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக் கட்டிடங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அப்போது, பணிகளை விரைந்து முடித்திடவும், பருவமழையினை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், திரு.வி.க.நகர் மண்டல கண்காணிப்பு அலுவலர் பி.கணேசன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், திரு.வி.க. நகர் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: