பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் 2ம் கட்டமாக 11.7.2024 முதல் 22.8.2024 வரை 54 முகாம்கள் 256 கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளதை தொடர்ந்து, நேற்று காஞ்சிபுரம் வட்டம், அய்யங்கார்குளம் ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இம்முகாமில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடிகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்வியப்பிரியா இளமது, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முகாமில் திருமங்கலம், சந்தவேலூர் மற்றும் மொளச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், பட்டா உட்பிரிவு செய்யவும், மின்னனு குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், சேர்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு வழங்கினர். இந்நிகழ்வில், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் சதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஆண்டனி வினோத்குமார், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சந்தவேலூர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமங்கலம் ரேகா நரேஷ்குமார், சந்தவேலூர் வேண்டாமணி, உள்ளாட்சி பிரிதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: