திருப்போரூர் அருகே ஆலத்தூர் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஆலத்தூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக மண் எடுக்கவும், ஏரியை ஆழப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில். நேற்று முன்தினம் ஏரியில் இருந்து மண் எடுத்துச்செல்ல லாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் வந்தன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மண் அள்ளாமல் திரும்பிச்சென்றன. இந்நிலையில், நேற்று மீண்டும் மண் அள்ள வாகனங்களும், பொக்லைன் எந்திரமும் வந்தது.

இதையடுத்து, ஆலத்தூர் கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து இந்த ஏரியை நம்பி 600 ஏக்கர் விவசாய நிலங்கள் இருப்பதாகவும், 20 அடி ஆழத்திற்கு மண் அள்ளிச்சென்றால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும் என்றும், இதனால் குடிநீருக்கு கூட கஷ்டப்படும் நிலை உருவாகும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து, வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், மாவட்ட கலெக்டரிடம் உரிய உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

The post திருப்போரூர் அருகே ஆலத்தூர் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: