மத்திய தகவல் தொடர்பு அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரை கண்டித்து செங்கல்பட்டு, மாமல்லபுரம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதிகளில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அப்போது, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் ‘‘சாதி பெயர் தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்” என்று ஜனநாயக மரபை மீறி தரக்குறைவாக பேசினார். இதனை கண்டிக்க வேண்டிய பிரதமர் மோடி இந்த சம்பவத்தை ரசித்ததோடு மட்டுமல்லாமல் அவரது எக்ஸ் தளத்தில் ‘‘இது அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய தகவல்’’ என வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியின் செயலை கண்டித்து நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனுராக் தாக்கூர் மற்றும் மோடியின் இச்செயலை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, செங்கல்பட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷம் எழுப்பினர். இதில், மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன், மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல், மாவட்ட மகளிரணி தலைவர் வேல்விழி, நகர் தலைவர் தனசேகர், வட்டார தலைவர் வின்சென்ட் ராஜ், சாகுல்அமீது, சத்யசீலன், தாமோதரன், ரியாஸ் உள்பட மாவட்ட, பேரூர், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், வட்டார தலைவர்கள் தயாளன் (திருக்கழுக்குன்றம்), பன்னீர்செல்வம் (திருப்போரூர்), நகர தலைவர்கள் சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த போது நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சாதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அம்பானிக்கும், அதானிக்கும் துணை போகும் பாஜ அரசை விரைவில் தூக்கி எரிய வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனுராக் தாக்கூரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், என்று கைகளில் பாதாகைகளை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர். இறுதியில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மத்திய தகவல் தொடர்பு அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: