திருப்போரூர், செப்.3: திருப்போரூர் நகரப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை அடையாளம் காணுதல், போக்குவரத்து ெநரிசல், இரவுநேர பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் திருப்போரூர் ரவுண்டானா, நான்கு மாடவீதிகள், பேருந்து நிலையம், ஓஎம்ஆர் சாலை, இள்ளலூர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேரடி, கோயில் கிழக்கு வாசல், தெற்கு வாசல், மொட்டை அடிக்கும் மண்டபம், அலுவலகம் ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த கேமராக்களை பராமரிக்கும் பணியில் காவல்துறையினர் சுணக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக இவற்றின் வயர்கள் துண்டிக்கப்பட்டு விழுந்து கேமராக்கள் தலைகீழாக தொங்குகின்றன. இந்த கேமராக்கள் செயலிழந்து விட்டதால் குற்றச்செயல்களை நடைபெறுவதை தடுப்பதிலும், குற்றவாளிகளை அடையாளம் காணுதல், திருட்டு வாகனங்களை அடையாளம் காணுதல் போன்றவற்றிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தனியார் பங்களிப்பை நாட வேண்டிய நிலை காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது. கேமரா பொருத்துவதற்கே வியாபாரிகள் சங்கம், தனியார் நிறுவனங்கள், ஜூவல்லரிகள் போன்றவற்றை அணுகி அந்த வசதியை கேட்டுப்பெற்றனர். தற்போது, அவற்றின் பராமரிப்பு செலவினங்கள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட காவல்துறை சார்பில் திருப்போரூர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் சரியாக பொருத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post திருப்போரூர் நகரப்பகுதியில் பழுதான சிசிடிவி கேமராவால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.