தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மத்திய மற்றும் தென்னிந்தியாவுக்குட்பட்ட 230 மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை, வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 232 மாவட்டங்களில் சராசரி அளவுக்கும் குறைவாகவே பெய்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுவாகவே மே மாத இறுதியில் மழை காலம் தொடங்கும். ஜூனில் சாரலுடன் ஜூலையில் முழு வீச்சில் மழை பெய்யும். நேற்று ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில் நடப்பாண்டை பொறுத்த வரை மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சராசரி அளவை விட குறைவாகவே பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலையில் இந்தியாவில் பெரும் பகுதிகளில் தேவையான மழைப்பொழிவு பதிவு செய்யப்படும்.

ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள 36% மாவட்டங்களில், அதாவது 742 மாவட்டங்களில் 267 மாவட்டங்களில் சராசரி அளவை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதில் ஜார்கண்டில் உள்ள 24 மாவட்டங்கள், பீகாரில் 33, பஞ்சாப் 19, அரியானா 22, டெல்லி 5, ஜம்மு கேஷ்மீரில் உள்ள 15 மாவட்டங்களில் மிக குறைவான அளவில் மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக மலை பிரதேச மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 12 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மழையால் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இதில் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள்தான் மோசமான மழை பொழிவை சந்தித்துள்ளது.

அதில் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளில் பெயருக்குகூட மழை பெய்யவில்லை. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ராஜீவன் கூறுகையில், ‘ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்ததால் வட மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி விட்டன. ஜூலை மாதமும் தென்னிந்திய பகுதிகளில்தான் அதிக மழை பெய்துள்ளது. இதனால் பீகார், ஜார்கண்ட், பெங்கால் பகுதிகள் மோசமான வறட்சியை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் வடமேற்கு பகுதிகளில் குறைவான அளவிலேயே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’ என்றார். ஜூலை மாதத்தை பொறுத்த வரை டெல்லியில் 44% வரையிலும், அரியானாவில் 38% வரையிலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரியானாவில் உள்ள 22 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மட்டுமே சராசரி அளவில் மழை பெய்துள்ளது.

 

The post தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: