இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டிய மழை: வெள்ளத்தில் சிக்கி இருவர் பலி; 45 பேரை காணவில்லை!!

ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டிய மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மேகவெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் சிம்லா மாவட்டம் ராம்பூரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை சரிவுகளில் இருந்து காட்டாறு போல வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வந்ததால் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன. ஏராளமான வீடுகள், கட்டடங்களை வெள்ளம் நொடி பொழுதில் சாய்த்து விட்டது.

மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டதால் சிம்லா, மண்டி, குல்லு மாவட்டங்களில் 45 பேரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. பலத்த மழையால் குல்லுவில் உள்ள பார்வதி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கரையோரத்தில் உள்ள கட்டடங்களை தரைமட்டமாக்கியது. உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண் படையினர் இடிபாடுகளில் இருந்து இருவரது உடல்களை மீட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். மேகவெடிப்பு காரணமாக பல இடங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் ராம்பூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளை மறைத்திருக்கும் பாறைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்து இருக்கிறார். இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குல்லு, சோலார், ஷிம்லா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிப்பதை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டிய மழை: வெள்ளத்தில் சிக்கி இருவர் பலி; 45 பேரை காணவில்லை!! appeared first on Dinakaran.

Related Stories: