மதுராந்தகம் அருகே மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுராந்தகம், ஆக. 1: மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் ஆடிமாதத்தையொட்டி, தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து காப்பு அணிவித்து சாமி ஊர்வலம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கிராம மக்களின் சீர்வரிசியுடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று காலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில், ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் 800 ஆடுகள், 1200 கோழி ஆகியவற்றை பலியிட்டு அருகில் உள்ள வயல்வெளி பகுதியிலேயே சமைத்து உறவினர்களுக்கும், பக்தர்களுக்கும் அசைவ உணவு பரிமாறி செல்லியம்மன் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி மதுராந்தகத்திலிருந்து மாரிபுத்தூர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post மதுராந்தகம் அருகே மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: