பொத்தேரியில் தெருநாய் கடித்து பள்ளி மாணவன் படுகாயம்

செங்கல்பட்டு, ஆக. 1: பொத்தேரியில் தெருநாய் கடித்து பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகன் காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கிழக்கு பொத்தேரி காத்தவராயன் தெருவில் மாணவன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த தெருநாய் திடீரென்று மாணவனை கடித்து குதறியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மறைமலைநகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மறைமலைநகரில் உள்ள 21 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் தொல்லையால் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. இரவுப்பணி முடித்து இருசக்கர வாகனங்களில் வீட்டிற்கு வருவோரை விரட்டிக்கடிக்கிறது. நாய்களிடம் சிக்காமல் வேகமாக செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

The post பொத்தேரியில் தெருநாய் கடித்து பள்ளி மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: