காஞ்சிபுரத்தில் மாணவர் அணி கூட்டம் மாணவர்கள் திமுக வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்: உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மாணவர் அணி கூட்டத்தில், மாணவர்கள் திமுகவின் வரலாற்றினை தெரிந்துகொள்ள வேண்டும் என்று உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் திமுக அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, நேர்காணல் கூட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: 1967ம் ஆண்டு கழகத்திற்கு அடித்தளமாக விளங்கியது மாணவர் மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் தான். அன்றைய மாணவ அமைப்பிலிருந்தபோதுதான் அண்ணா 40வயது, கலைஞர் 25வயது என இளைஞர்கள் இருந்தார்கள். அன்று இளைஞர்களும், மாணவர்களும் தான் கழகத்தை கட்டிக் காத்தார்கள். மேலும் நாவலர், பேராசிரியர், அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? முதலில் திமுகவின் வரலாறு நீங்கள் படிக்க வேண்டும். அதேபோல, புத்தகங்களை நேரம் கிடைக்கும்போது படித்து விவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். திமுகவிற்கு மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என 3 அணிகளும் என்றும் செயல்படக்கூடிய அணிகளாக இருந்து இன்று முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.

அற்புதமான திராவிடர் மாடல் ஆட்சி நடத்தி வரும் நமது தளபதி மு.க.ஸ்டாலின், 1982ல் இளைஞர் அணியின் முக்கிய பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, நீங்கள் திமுகவிற்கு தூணாகிருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன், மாநில இணை செயலாளர் ஜெரால்ட், மாநில துணை செயலாளர் சேலம் தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் டி.ராம்பிரசாத், எஸ்.தமிழ்செல்வன், ஏ.வி.சுரேஷ்குமார், சரளா தனசேகரன், சரன்ராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பி.எம்.பாபு, குமணன், சேகர் பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் மாணவர் அணி கூட்டம் மாணவர்கள் திமுக வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்: உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: