மதுராந்தகம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படிப்பு என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு உயர்வுக்கு படிப்பு என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி அரங்கில் நேற்று முன்தினம் காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி, ஆர்டிஓ தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி 25 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணையினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கல்வியாளர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பது குறித்து மாணவர்களிடையே விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, தொழில் மைய மேலாளர் வித்யா, வங்கி மேலாளர் விஜயகுமார், அலுவலர்கள் மற்றும் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படிப்பு பயிற்சி பட்டறை; செங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.