உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் மயக்கம் கேட்டரிங் சூபர்வைசர் 2 பேர் கைது: கல்லூரி நிர்வாகிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை: விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் ஊழியர்கள் மயக்கம்போட்டு விழுந்தது தொடர்பாக கேட்டரிங் சூபர்வைசர் 2 பேரை போலீசார் கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.இதற்கிடையில், கடந்த 5 நாட்களுக்கு முன் விடுதியில் உணவு சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஜமீன் கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன் சென்றபோது தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகிகள் செந்தில்குமார்(50), அவரது மனைவி ஹேமலதா(45) மற்றும் சமையல்காரர் முனுசாமி ஆகியோர் பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி, திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு சமைத்து கொடுத்ததாக தாம்பரத்தில் உள்ள சக்தி கேட்டரிங் மேற்பார்வையாளர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த பிபின்(34), தர்மபுரியை சேர்ந்த கவியரசு(35) ஆகியோரை ேநற்று கைது செய்தனர். மேலும், தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் அனுமதியின்றி பெண் தொழிலாளர்களுக்கு இடம் அளித்த கல்லூரி நிர்வாகிகள் சென்னை தி.நகரை சேர்ந்த செந்தில்குமார் அவரது மனைவி ஹேமலதா மற்றும் சமையல்காரர் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.* பெண் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பீதியை ஏற்படுத்தியதாக பெண் கைது: எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் நடவடிக்கை சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து சமூக வலைதளங்களில் பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலும் பதிவுகள் செய்யப்பட்டது.இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சேலத்தை சேர்ந்த வளர்மதி என்பவர், கடந்த வாரம் விடுதியில் தரமற்ற உணவு சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும், பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை தூண்டும் வகையிலும், பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராக பதிவு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சேலம் வளர்மதி மீது எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் ஐபிசி 153(ஏ), 505(1)(பி), 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர்….

The post உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் மயக்கம் கேட்டரிங் சூபர்வைசர் 2 பேர் கைது: கல்லூரி நிர்வாகிகளுக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: