தண்டராம்பட்டு, ஜூலை 31: சேலத்தில் இருந்து சென்னைக்கு 30 டன் ஒயிட் சிமென்ட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, தண்டராம்பட்டு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் படுகாயமடைந்தனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரியில் 30 டன் ஒயிட் சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு டிரைவர் பிரேம்குமார்(35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் வளைவு பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாய நிலத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
இதில் பிரேம்குமார், கிளீனர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து டிரைவர், கிளீனர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 30 டன் ஒயிட் சிமென்ட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது: டிரைவர், கிளீனர் படுகாயம் appeared first on Dinakaran.