காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், 184 பயனாளிகளுக்கு ரூ8.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒருநாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மனுக்கள் பெறப்படுகின்றது. இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்கக் கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட 363 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்தத் திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை நேற்று (இன்று) மனுக்களாக வழங்கப்பட்டுள்ளன. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு வங்கிகள் மூலம் 45 மாணவ – மாணவிகளுக்கு ரூ5.83 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ6.72 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ40,047 மதிப்பிலான திறன்பேசியும், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ2.26 லட்சம் மதிப்பீட்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ2.18 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேரும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ20,520 மதிப்பீட்டில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ18,450 மதிப்பீட்டில் மூளை முடக்குவாத சக்கர நாற்காலிகளும் என மொத்தம் ரூ11.96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 3 மகளிர் சுய கூட்டமைப்புக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ35 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக்கடனுதவிகளும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் மூலம் ரூ1.10 லட்சம் மதிப்பிலான நரிக்குறவர் மகளிர் சுயஉதவிகுழு கடன்களும், ரூ183.32 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவி குழு கடன்களும், ரூ5.30 லட்சம் கல்வி கடன்களும், ரூ3.50 லட்சம் மதிப்பிலான கைம்பெண் கடன்களும், ரூ3.25 லட்சம் மகளிர் தொழில் முனைவோர் கடன்களும், ரூ2.50 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளி கடன்களும், ரூ2.75 லட்சம் மதிப்பிலான பண்ணை சாராக் கடன்களும், ரூ10.05 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவி குழுக்கடன், சிறுவணிக கடன்களும், ரூ14 லட்சம் மதிப்பில் வீடு அடமான கடன்களும், ரூ50 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்களும்,
ரூ3 லட்சம் மத்திய கால கடன்களும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ2.29 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ72,800 மதிப்பிலான எரிவாயு பொருத்திய தேய்ப்பு பெட்டிகளும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ2 லட்சம் மதிப்பிலான சிறு தொழில் கடன்களும், தொழில் துறை சார்பில், பல்வேறு தொழில் தொடங்குவதற்கு 6 பயனாளிகளுக்கு ரூ12 லட்சம் மதிப்பிலான வங்கி கடன்களும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ8.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
முன்னதாக, பெரும்புதூர் வட்டம், வல்லம்-வடகால் ஊராட்சியில், ரூ706.50 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குவதற்காக சிப்காட் சார்பில், கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உடனிருந்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சிவமலர், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பள்ளி கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயின்ற 3,552 மாணவர்கள், 4,949 மாணவிகள் என மொத்தம் 8,471 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்து, மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 23,630 மாணவர்கள், 23,890 மாணவிகள் என மொத்தம் 47,520 மாணவ – மாணவிகளுக்கு 1,06,694 சீருடை துணிகள் வழங்கப்பட உள்ளதை, தொடர்ந்து கலெக்ட்ரேட் காலனி, ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் சீருடைகள் 74 மாணவர்களுக்கும், 71 மாணவிகளுக்கும் என மொத்தம் 145 மாணவ- மாணவிகளுக்கு சீருடைகளை அமைச்சர் வழங்கி, தொடங்கி வைத்தார்.
The post பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; 184 பயனாளிகளுக்கு ரூ8.76 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.