நீண்ட காலத்துக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல நட்புறவு வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம்: முதல்வர் சித்தராமையா பேச்சு

பெங்களூரு: கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பாகினா சமர்ப்பண பூஜை செய்து வழிபட்டார். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல காவிரியின் துணை ஆறான கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்ததால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக ஜூலை 3-வது வாரத்திலே 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி அன்னையின் சிலைக்கும், வருண பகவானுக்கும் பாகினா பூஜை செய்தனர். பின்னர் பூஜையில் வழங்கப்பட்ட பட்டுப்புடவை, பழங்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றை அணையில் கடல் போல் தேங்கியிருந்த காவிரி நீர் மீது வீசி, சமர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் மைசூரு மாவட்டம் ஹெச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு சென்று பாகினா சமர்ப்பணப் பூஜை செய்தனர். இரு அணைகளில் இருந்தும் மைசூரு, மண்டியா உள்ளிட்ட‌ மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக நீரை திறந்துவிட்டனர்.

முன்னதாக, முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில்; கர்நாடகாவில் நிகழாண்டில் நல்ல மழை பொழிந்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா – தமிழகம் இடையே பிரச்சினை ஏற்படாது. நீண்ட காலத்துக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல நட்புறவு நிலவ வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம் ஆகும். அந்த அணை கட்டப்பட்டால் பெங்களூருவுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். வறட்சி காலங்களில் தமிழகத்துக்கு தேவையான நீரையும் திறந்துவிட முடியும். இரு மாநில மக்களும் அந்த அணையால் பயனடைவார்கள். எனவே மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்” என்றார்.

The post நீண்ட காலத்துக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல நட்புறவு வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம்: முதல்வர் சித்தராமையா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: