ரூ.13.98 கோடி மதிப்பில் 589 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ரூ.13.98 கோடி மதிப்பில் 589 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் வெளியான அறிக்கையில்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று (30.07.2024) International Master, Women Grandmaster பட்டம் பெற்ற செஸ் வீரர், வீராங்கனைகள், All India Inter-University Games மற்றும் பல்வேறு தேசிய அளவிளான போட்டிகளில் வெற்றிப் பெற்று பதக்கங்களை வென்ற 589 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.13.98 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து, இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது;

“சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். தமிழ்நாடு அரசைப் பொறுத்த வரையிலும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்துவரும் நம்முடைய தமிழ்நாட்டு வீரர்களை எப்பொழுதும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நம்முடைய முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பல்வேறு சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று பதக்கங்களைப் பெற்ற 589 வீரர்களுக்கு சுமார் 14 கோடிரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை இங்கே வழங்க இருக்கின்றோம். இந்தத் திட்டத்தில் பயன்பெறக் கூடிய நீங்கள் அனைவரும் நம்முடைய முதலமைச்சருக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்.

அதுமட்டுமல்ல, நீங்கள் முதலமைச்சருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்கள். உங்களுடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நன்றிகளையும் அரசின் சார்பாக துறையின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு வந்துள்ள பலபேர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினுடைய விளையாட்டு விடுதியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. மகிழ்ச்சி. இப்போது ஒட்டுமொத்த உலகமும் விளையாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியிருக்கிறது.

இதில் நமது இந்தியாவின் சார்பாக மொத்தம் 117 வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை அடுத்து அதிக விளையாட்டு வீரர்களை அனுப்பி இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு அமைந்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 11 வீரர் வீராங்கனைகள், சுமார் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 17 பேர் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த 17 வீரர்களுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தலா ரூபாய் 7 லட்சம் வீதம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கி நம்முடைய முதலமைச்சர் வெற்றி பெற்று வர சொல்லி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொருவரையும் தன்னுடைய சொந்தப் பிள்ளையாக குடும்பமாக நினைத்துதான் நம்முடைய முதலமைச்சர் இந்த ஊக்கத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். நானும் உங்களுடைய கூடப்பிறந்த சகோதரனாக, அண்ணனாக வந்து இந்த உயரிய ஊக்கத்தொகையை வழங்க வந்திருக்கின்றேன். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 நாளில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் எனும் வீராங்கனை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது தனது துப்பாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக பதக்கத்தை தவறவிட்ட மனு பார்க்கர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக முயற்சி எடுத்து இன்றைக்கு இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது சிந்திய கண்ணீரை தனது விடா முயற்சியின் மூலமாக 3 ஆண்டுகளில் வெற்றியாளராக மாற்றியிருக்கிறார் மனு பார்க்கர்.

உங்களை சுற்றியிருப்பவர்கள் எத்தனை முட்டுக்கட்டைகளை போட்டாலும் எவ்வளவு இகழ்வான வார்த்தைகளைக் கூறினாலும், உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அவரைப் போலவே ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு இங்கு அமர்ந்திருக்கின்ற கூடிய வீரர், வீராங்கனைகளை நான் பார்க்கின்றேன். இந்தியாவின் பதக்கப் பட்டியலில் உங்களுடைய பெயர்களும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கும் எனக்கும் இருக்கின்றது. இதற்கு தமிழ்நாடு அரசும், நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு துறையும் உங்களுக்கு என்றென்றும் உற்ற துணையாக இருக்கும்.

குறிப்பாக இங்கு வீராங்கனைகள் அதிக எண்ணிக்கையில் மேலே வந்திருக்கிறீர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. பல்வேறு சமூகத் தடைகளை எல்லாம் தாண்டித்தான் நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். பெண் பிள்ளைக்கு எதற்கு விளையாட்டு என்று இன்றைக்கு கேட்கிற இவர்கள் தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு என்றும் கேட்டார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைக்கு வீட்டுப் படிக்கட்டை தாண்டி என்ன வேலை என்றுகூட கேட்டார்கள். அந்த கேள்விகளை எல்லாம் கண்டு பயப்படாத பெண்கள்தான். சமுதாயத்தை இந்தளவுக்கு நீங்கள் முன்னேற்றி இருக்கிறீர்கள். அந்த வரிசையில் நீங்களும் நாளை இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கும் ஏற்பட வேண்டும்.

இந்த மேடையில் உட்கார்ந்து இருக்க கூடிய கால்பந்தாட்ட வீராங்கனை இந்துமதி வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை கடந்து இந்திய மகளிர் கால்பந்து அணியினுடைய கேப்டனாக உயர்ந்தார். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை என்ற விருதையும் பெற்றுள்ளார். அவருக்கு என் சார்பாகவும், உங்களுடைய சார்பாகவும் வாழ்த்துக்களை நாம் தெரிவித்துக் கொள்வோம். அதேபோல் இந்துமதி, சகோதரி பவானி தேவி போன்றவர்களைத் தான் நாம் அனைவரும் எடுத்துக்காட்டாக முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உங்களுக்கெல்லாம் உயரிய ஊக்கத்தொகையை இந்த அரசு கொடுத்திருக்கிறது. இது உங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கப் போகிறதோ அதே அளவுக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கின்ற ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதுமட்டுமல்லாமல் High Cash Incentives மட்டுமல்லாமல் Elite Sports Person Scheme , Mission International Medal Scheme, Champion Development Scheme போன்றவற்றின் மூலமாகவும் நம்முடைய அரசு விளையாட்டு வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்கின்றன. சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக 100 க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகளுக்கு 9 கோடி அளவுக்கு அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது இந்த திராவி மாடல் அரசு.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உங்களுடைய நண்பர்கள் வட்டாரத்திலும் இருக்கின்ற விளையாட்டு வீரர்களுக்கும் இதனை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள். தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புகளால் நம்முடைய வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து பெருமையைத் தேடித் தருகின்றார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நம்முடைய தமிழ்நாடு மாநிலம் முதன் முறையாக பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

இந்த வகையில் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையில் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய மாநிலத்திற்கு பாராட்டுகளும், விருதுகளும் குவிந்து வருகின்றன. குறிப்பாக The Hindu – Sportstar சார்பாக ‘The Best State for Promotion of Sports’ எனும் விருது, அதேபோல். CII – Sports Business Award-ல் ’Best State Promoting Sports’ எனும் உயரிய விருது போன்ற விருதுகள் நம்முடைய தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளும் அங்கீகாரங்களும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்றது என்றால் அதற்குக் காரணம் இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் நீங்கள்தான் ஒரே காரணம். உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த விருதுகள்தான் அவை என்பதை நான் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். உங்களுடைய வெற்றிப் பயணம் தொடர்ந்திட தமிழ்நாடு அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும். தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உள்ள விளையாட்டு வாய்ப்புகளில் வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3% சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உங்களை போன்ற வீரர்கள் பல ஆண்டுகளாக பல கோரிக்கைகளை வைத்து வருகின்றார்கள்.

கழக அரசு அமைந்த பிறகு நம்முடைய முதலமைச்சர் தன்னுடைய சீரிய நடவடிக்கையின் காரணத்தால் முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க இருக்கிறோம் என்று சட்டசபையிலேயே நான் பதிவு செய்தேன். அதில் முதல்கட்டமாக குறிப்பாக கூடிய விரைவில் 50 வீரர்களுக்கான பணிநியமன ஆணைகளை நம்முடைய முதலமைச்சர் அவருடைய கைகளாலேயே வழங்க இருக்கின்றார் என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உங்களுடைய கோரிக்கைகளை, தேவைகளை அரசுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசும், நம்முடைய துறையும் எப்போதும் தயாராக இருக்கின்றது. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் இதுவரை 2756 வீரர்களுக்கு ரூபாய் 90.24 கோடி அளவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். வருங்காலத்திலும் இது தொடரும். நாம் எல்லோரும் இணைந்து தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத் துறையில் தலை நகராக மாற்றுவோம். உயரிய ஊக்கத்தை பெற வந்துள்ள அத்தனை வீரர் வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்து விடைபெறுகின்றேன்” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, கால்பந்து வீராங்கனை இந்துமதி, ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.13.98 கோடி மதிப்பில் 589 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: