இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: தரைக்காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வறுத்தெடுத்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் படிப்படியாக குறைந்து ஜூலை முதல் வாரம் வரை வெயில் வாட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70 சதவீதத்தை கொடுக்கும்.

எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 64 சதவீதம் கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 105.9 மி.மீ., தான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 173.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 794.2 மி.மீ, கோவையில் 558 மி.மீ என மழை பெய்திருக்கிறது. இன்னும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் பெரிய அளவில் நிரம்பவில்லை.

இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும், பிற மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும். இந்நிலையில், இன்று முதல், ஜூலை 30 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். வலுவான தரைக்காற்று, மணிக்கு,, 40 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இன்று காலை முதல் கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஆகஸ்ட் 3ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வரையிலான வேகத்திலும், இடையிடையே, மணிக்கு 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: தரைக்காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: