நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்?: சபாநாயகர் அப்பாவு பேட்டி

பூந்தமல்லி: காமராஜரின் 122வது பிறந்த தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் நாடார் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு நடந்தது. வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், நிர்வாகிகள் போரூர் ஆனந்தராஜ், பூவை கந்தன், திருவேற்காடு செல்வம் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிக எம்பிக்களை கொடுத்துள்ள உத்தரப்பிரதேசத்திற்குகூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஆயோக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் சென்றால் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியேறினார்.

பேச மறுக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த கூட்டத்தை புறக்கணித்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்திற்கு ஏதாவது கூடுதலாக நிதியுதவி கொடுத்துள்ளார்களா என்றால் ஏதுமில்லை. செய்யூரில் 4000 மெகாவாட் மின் திட்டத்திற்கு கலைஞர் கருணாநிதி நிலம் கையகப்படுத்தி வைத்திருந்தார். அந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அந்த திட்டம் நிறைவேறி இருந்தால் 4000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும்.

மின் கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருவது குறித்து முதல்வர்தான் அறிவிப்பார். தமிழ்நாட்டில் எந்த குற்ற சம்பவம் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

The post நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்?: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: