விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி மெயின்ரோடு, கடைவீதியில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வந்தது. இது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மிகவும் பழமையானதால் அங்கு செயல்பட்டு வந்த மத்திய கூட்டுறவு வங்கி கடந்த ஒரு வருடங்களாக மாரியம்மன் கோயில் தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த அக்கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கட்டிடத்தை இடிக்க டெண்டர் விட்டனர். இதனை தொடர்ந்து கட்டிடம் இடிக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தை இடித்தபோது சுற்றுவட்டாரத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு பூமியில் பலத்த அதிர்வு ஏற்பட்டு அருகிலுள்ள கட்டிடங்கள் பலத்த அதிர்வு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பொக்லைன் இயந்திர டிரைவரிடம் எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்த கூறினர். மேலும் ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரித்தனர். இதையடுத்து வங்கி கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அருகில் இருக்கும் வீடுகள் கடைகள் பாதிக்காதவாறு இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதன் அருகில் புதிய வங்கி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் நிர்வாக சிக்கல் காரணமாக அந்த பணியும் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
