தென்காசி: மழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் கடந்த 2 நாட்களாக அவ்வப் போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக, மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுந்தது.
ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலையும் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் உடனடியாக தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மெயினருவியில் தடை விதிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
