தவறான தகவல் தந்தால் தண்டனை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை: நாளை மறுதினம் கடைசி நாள்

புதுடெல்லி: பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக ரிட்டன் தாக்கலில் மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான கணக்குகளை சமர்பிப்பது தண்டனைக்குரிய குற்றம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கு வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அவகாசம் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த 26ம் தேதி வரையிலும் சுமார் 5 கோடி ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை விடுத்துள்ள பொது அறிவிப்பில், ‘பிடித்தம் செய்யப்பட்ட வரிப்பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் சரிபார்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே இது சற்று தாமதத்தை ஏற்படுத்தலாம். பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை விரைவில் திரும்பப் பெற ஐடிஆர்களை துல்லியமாக தாக்கல் செய்வது அவசியம்.

இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் திருத்தப்பட்ட ரிட்டன்களை செய்ய வரி செலுத்துவோருக்கு தகவல் அனுப்பப்படும். அதே சமயம், பிடித்தம் செய்யப்பட்ட வரி பணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக போலியான அல்லது மிகைப்படுத்தப்பட்ட செலவின கணக்குகளை தெரிவிக்க வேண்டாம். அது தண்டனைக்குரிய குற்றமாகும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 31ம் தேதி. இந்த கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

The post தவறான தகவல் தந்தால் தண்டனை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை: நாளை மறுதினம் கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: