எதிர்க்கட்சியை ஒடுக்குவதை பாஜ இன்னும் விடவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: எதிர்க்கட்சியை ஒடுக்கும் வழக்கத்தை பாஜ இன்னும் விடவில்லை என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ எதிர்க்கட்சி உறுப்பினர்களை, எதிர்க்கட்சி குரலை அடக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்திலும் பேச விடுவது கிடையாது. நிதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவது கிடையாது. ஏதாவது பேசினால் வழக்கு தொடர்வது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒரு முதலமைச்சர் ஐந்து நிமிடம் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இன்னும் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் ஏன் அனுமதிக்க கூடாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது நேஷனல் டெவலப்மெண்ட் கவுன்சில் கூட்டம், இண்டர் ஸ்டேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குஜராத் முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞான் பவனில் முன் வரிசையில் வலது புறம் அமர்ந்திருப்பார்.

அவருக்கு மைக் தரும்பொழுது 20 நிமிடம், 25 நிமிடம் உரையாற்றி இருக்கிறார். எனக்கு அது பூரணமாக நினைவிருக்கிறது. அவர் பேசும்போது யாரும் குறுக்கிடவில்லை. நிறுத்தவில்லை. எதிர்க்கட்சி முதலமைச்சர் தற்போது பத்து நிமிடம், 15 நிமிடம் கூடுதலாக பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினை ஒடுக்கும் வழக்கத்தை பாஜ இன்னும் விடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எதிர்க்கட்சியை ஒடுக்குவதை பாஜ இன்னும் விடவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: