மழைநீர் கால்வாய் உடைந்தது டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலி: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

புதுடெல்லி: மத்திய டெல்லியில் உள்ள பழைய ரஜிந்தர் நகரில் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கிருந்த மழைநீர் கால்வாய் உடைந்து தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்திற்குள் மழை நீர் நேற்று முன்தினம் புகுந்தது. இதில், சிக்கி 3 மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கடந்த மாதம் 28ம் தேதி பருவமழை தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், டெல்லியின் சில இடங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. அதேபோல், மத்திய டெல்லி பழைய ரஜிந்தர் நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெருக்கெடுத்த மழை நீர் செல்ல முடியாததால் அங்கிருந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அந்த வெள்ள நீர் அங்குள்ள ராவ் ஐஏஎஸ் அகாடமியின் அடித்தளப் பகுதிக்குள்(அன்டர்கிரவுண்ட்) நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென புகுந்தது. அங்கருந்த நூலகத்தில் படித்து கொண்டிருந்த 30 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் அலறினர். அவர்களில் 27 பேர் தப்பி மேலே வந்து விட்டனர். ஆனால், தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வந்ததால் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேரும் வெளியே வர முடியாமல் சிக்கினர்.

நூலகத்துக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கீழே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினருடன் இணைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 மாணவிகளை சடலமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், தொடர்ந்து சோதனை நடத்தியதில் அங்குள்ள அறையில் சிக்கியிருந்த ஒரு மாணவரின் உடலை மீட்டனர். பின்னர், 3 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த மீட்பு பணி நேற்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. அந்த தளத்தில் வேறு மாணவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே மீட்பு பணியை தீயணைப்பு படையினர் நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் எம். ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: சம்பவம் நடந்த ரஜிந்தர் நகர் பகுதியில் அதிகளவு ஐஏஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில், ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தள பகுதியில் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்காக லைப்ரரியில் படித்து கொண்டிருந்த போது மழை வெள்ளம் புகுந்து விட்டது. அதிக வேகத்தில் மழை நீர் உள்ளே புகுந்ததால் கதவை உடைத்து கொண்டு தண்ணீர் உள்ளே சென்றுள்ளது. அதில், சிக்கி 3 மாணவர்கள் பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவை சேர்ந்த தனியா சோனி (25) மற்றும் கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த நேவின் டெல்வின் (24) என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை கைது செய்துள்ளோம். சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விபத்து குறித்து அமைச்சர் அடிசி கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது குறித்த அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் தலைமை செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையம் முற்றுகை மாணவர்கள் மீது தடியடி
மூன்று மாணவர்கள் பலியானதற்கு நீதி கேட்டு பயிற்சி மைய மாணவர்கள் கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரயில்கள், பயணிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றதால்,போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும், சில மாணவர்களையும் கைது செய்தனர்.

அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு உயிரை விலையாக கொடுக்கும் மக்கள் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உயிரிழந்த மாணவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,‘மக்களவை இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லியில் நடந்த 2வது சோகம் இது . கடந்த வாரம் மழையின் போது சிவில் சர்வீஸ் தேர்வு மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் உள்கட்டமைப்பு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது.

பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை, அதை அமைத்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகர திட்டமிடல், அரசின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்டவற்றால் சமானிய மக்கள் தங்கள் உயிரை விலையாக கொடுக்கின்றனர். எனவே, மாணவர்கள் உயிரிழப்புக்கு ஒட்டுமொத்தமாக உள் கட்டமைப்பு தோல்வியே காரணம்’ என்று காந்தி தெரிவித்துள்ளார். 3 மாணவர்கள் இறந்த சம்பவத்தை கேட்டு இதயம் நொறுங்கியதாக காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் தலைவரான சோனியா காந்தி, எக்ஸ் வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

The post மழைநீர் கால்வாய் உடைந்தது டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலி: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: