வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் இல்லை: ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில், நிதி மசோதா 2024ன்படி, வெளிநாடு செல்லும் அனைத்து நபர்களும், நாட்டை விட்டு வெளியேற வரி அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயம் என திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி மசோதா 2024ல், கறுப்பு பணச்சட்டம் 2015ன் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, வெளிநாடு செல்லும் நபர்கள் வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, வெளிநாடு செல்லும் அனைத்து நபர்களும் வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இல்லை.

வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 230ன் படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் வரி நிலுவை வைத்திருப்பவர்கள் மற்றும் கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். அவர்கள், வருமான வரித் தலைமை ஆணையரிடம் வரி பாக்கி மற்றும் புகார்களுக்கான காரணங்களை விளக்கி, ஒப்புதல் பெற்ற பின்னரே வரி அனுமதி சான்றிதழை பெற முடியும். இதில் எந்த வரி பாக்கியும் இல்லை என வருமான வரி அதிகாரிகளால் சான்றிதழ் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

The post வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் இல்லை: ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: