செய்தியாளர் சந்திப்பின் போது ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

பெங்களூரு: செய்தியாளர் சந்திப்பின் போது ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் 2வது மகன் எச்டி குமாரசாமி மஜகவின் கர்நாடகா மாநில தலைவராக உள்ளார். இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குமாரசாமி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா ஆகியோர் இன்று கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு முதல்வர் சித்தராமையாவிற்கு எதிரான மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக பேட்டியளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குமாரசாமி மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கையில் இருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்ட குமாராசாமி அவசர அவசரமாக தனது காரில் ஏறி ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். சட்டையில் இரத்த கறைகளுடன் குமாரசாமி தனது காரில் ஏறி செல்லும் காட்சிகள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமிக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை எனவும் இப்போது இரத்தப்போக்கு நின்றுவிட்டது, கவலைப்படத் தேவையில்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post செய்தியாளர் சந்திப்பின் போது ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: