2 கோடி ரூபாய் செலவில் மாதவரத்தில் 3 இடத்தில் ரவுண்டானா: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை சந்திப்பில் இருந்து பால்பண்ணை சாலை, காமராஜ் சாலை இடையே தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. அதிகளவில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளில் மருத்துவமனை, பள்ளி, மார்க்கெட், பூங்கா உள்ளிட்டவை உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்கின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட பகுதியில் ரவுண்டானா அமைக்கவேண்டும் என்று மாதவரம் மண்டலம் 26 வது வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி பணிகள் குழு உறுப்பினருமான ஆஷ்னா மெறிசியாபெனின், சென்னை பணிக்குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வாகனங்கள் சென்றுவரும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.2 கோடி செலவில் மூலக்கடை சந்திப்பு, பால்பண்ணை கேட் மற்றும் இடையுமா நகர் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகளுடன் கூடிய ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்டவரைவுகளை தயாரிக்கும் வகையில் மாநகராட்சி போக்குவரத்து சாலை மேற்பார்வை பொறியாளர் பாலமுரளி, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சித்ரா, கவுன்சிலர் ஆஷ்னா மெறிசியாபெனின் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘’ரவுண்டானா அமைக்க செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட வரைவுகளை தயாரித்து முறையான ஒப்புதல் பெற்று விரைவில் பணிகள் துவங்கும்’ என்றனர். இந்த ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலர் நாஞ்சில் ஞானசேகர், மாதவரம் மண்டல அதிகாரிகள் இருந்தனர்.

The post 2 கோடி ரூபாய் செலவில் மாதவரத்தில் 3 இடத்தில் ரவுண்டானா: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: