மக்களுடன் முதல்வர் திட்டம்.. மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை :மக்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை. வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையின் போது, திட்டத்தின் செயல்பாடுகள், கோரிக்கை மனுக்களின் நிலை, சிறப்பு முகாம்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post மக்களுடன் முதல்வர் திட்டம்.. மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: