மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதா? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: கேரளா, மேற்கு வங்கம் தொடர்ந்த வழக்கில் அதிரடி


* சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட கேரளா, மேற்கு வங்கம் வழக்கு.
* இரு மாநிலங்களின் ஆளுநர்களின் முதன்மை செயலாளர்கள் மூன்று வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ்.
* இந்த வழக்கில் ஒன்றிய அரசும் எதிர்மனுதாரராக சேர்ப்பு.

புதுடெல்லி: மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக கூறி ஆளுநர்களுக்கு எதிராக கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் தொடர்ந்த மனு மீது மூன்று வாரத்தில் பதிலளிக்க அம்மாநில ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசு, பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் அவர்களுக்கு சாதகமான ஆளுநர்களை நியமனம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீடிக்கிறது.

இந்நிலையில் கேரளா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில மாதங்களாக கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். மேலும் சில மசோதாக்களை அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் உள்ளது.

அதில் முக்கியமாக கேரளாவில் ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கும் இரண்டு மசோதாக்கள், துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களில் அரசாங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, பல்கலைக்கழக மேல்முறையீட்டு தீர்ப்பாய மசோதா, ஊழல் எதிர்ப்பு குறை தீர்ப்பாளர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கான லோக் ஆயுக்தா (திருத்தம்) மசோதா மற்றும் கேரளா மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா ஆகிய அனைத்தும் அடங்கும்.

மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு சர்ச்சைக்குரிய போலீஸ் திருத்த சட்ட மசோதாவுக்கு மட்டும் கலந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரள ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு பரிந்துரையுடன் கூடிய ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “கேரளா ஆளுநர் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கடந்த எட்டு மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளார். இதனால் மக்களுக்குக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது. ஆளுநர் ஏற்படுத்தும் குழப்பம் கேரளா அரசுக்கு எதிரானது மட்டும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இதே பிரச்னை எங்களது மாநிலத்திலும் உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தபோது உச்ச நீதிமன்றம் தலையிட்டுதான் அதனை முடித்து வைத்தது. அதன் பிறகே தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்” என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், “சட்டப்பேரவையில் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் கேரளா அரசின் வழக்குடன் மேற்கு வங்க அரசின் மனுவும் இணைத்து விசாரிக்கப்படும். இருப்பினும் மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறித்து கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களின் முதன்மை செயலாளர்கள் மூன்று வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

அதேபோன்று இந்த வழக்கில் ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரர்களாக உச்ச நீதிமன்றம் இணைக்கிறது. அதனால் மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசும் மூன்று வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வேண்டுமானால் பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை மூன்று வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதா? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: கேரளா, மேற்கு வங்கம் தொடர்ந்த வழக்கில் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: