கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் கட்சியின் பொது செயலாளர் குணால் கோஷ் மற்றும் 2 எம்எல்ஏக்களுக்கு எதிராக ஆளுநர் ஆனந்தபோஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, ஆளுநருக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான அறிக்கையை மம்தா வெளியிடக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இடைக்கால உத்தரவை எதிர்த்து மம்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்தார்.
நீதிபதிகள் ஐ.பி. முகர்ஜி மற்றும் பிஸ்வரூப் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதி முகர்ஜி,‘‘மம்தா, குணால் கோஷ் ஆகியோர் ஆளுநரை விமர்சிக்கலாம். அவை சட்டத்திற்கு உட்பட்டும் அவதூறு இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்றார். நீதிபதி பிஸ்வரூப் சவுத்ரி,‘‘ ஒரு மனிதனின் நற்பெயர் அவருக்கு புனிதமானது. அதை பாதுகாக்க சட்டம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.மறுபுறம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதை தடுக்க முடியாது. இருப்பினும் இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’’ என்றார்.
The post சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநரை விமர்சிக்கலாம்: மம்தா வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.