தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 11 பாலங்கள் கட்டும் போது நடந்த விபத்தில் 6 பேர் பலி: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 11 பாலங்கள் கட்டும் போது நடந்த விபத்தில் 6 பேர் வெவ்வேறு சம்பவங்களில் பலியானதாக, மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்கள் சில இடங்களில் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

தற்போதுள்ள பாலங்களின் நிலை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிரத்தின் அடிப்படையில் பழுது, மறுசீரமைப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மூன்று நிதியாண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டில் இருந்த 15 பாலங்கள் இடிந்து விழுந்தன. 11 பாலங்களில் கட்டுமானப் பணிகள் நடந்த போது இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பயன்பாட்டில் இருந்து வந்த பாலங்களில், இடிந்து விழுந்த 15 பாலங்களில், தலா இரண்டு அரியானா, ஒடிசா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்தவை. ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பாலம் இடிந்து விழுந்தது.

இந்த பாலங்கள் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பீகாரில் மூன்று பாலங்கள் கட்டும் போது, இருவர் பலியாகினர். ஒடிசா மற்றும் தமிழகத்தில் தலா இரண்டு பாலங்களும், டெல்லி, சிக்கிம், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒன்றும் இடிந்து விழுந்தன. சிக்கிம் மாநிலத்தில் சிங்டம்-தர்கு என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் பாலம் தாங்கியை சரி செய்யும் போது, ஹைட்ராலிக் ஜாக் பழுதாகி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் டெல்லியில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்தார்.

The post தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 11 பாலங்கள் கட்டும் போது நடந்த விபத்தில் 6 பேர் பலி: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: