ஜார்கண்டில் முதலில் வினாத்தாள் லீக்; ‘நீட்’ வழக்கில் இதுவரை 36 பேர் கைது.! சிபிஐ அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நீட் வினாத்தாள் லீக் வழக்கில் இதுவரை 36 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், முதன்முதலில் ஜார்கண்டில் வினாத்தாள் லீக் ஆனதாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் அமைந்துள்ள ஒயாசிஸ் பள்ளியில் கடந்த மே 5ம் தேதி காலை, நீட் வினாத்தாள் கசிந்தது.

பங்கஜ் குமார் என்பவர் சாஹில் என்பவருக்கு வினாத்தாளை கொடுத்துள்ளார். இதற்கு நீட் வினாத்தாளின் தேசிய தேர்வு முகமையின் நகர ஒருங்கிணைப்பாளர், ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், பள்ளியின் மையக் கண்காணிப்பாளர், துணை முதல்வர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி, நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்து வினாத்தாள்களை திருடியுள்ளனர். திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் ஹசாரிபாக்கை சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்த மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். தலைமறைவாக இருந்த பங்கஜ் குமார், பள்ளி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளோம். பாதி எரிந்த நிலையில் நீட் வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 33 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜார்கண்டில் முதலில் வினாத்தாள் லீக்; ‘நீட்’ வழக்கில் இதுவரை 36 பேர் கைது.! சிபிஐ அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: