உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா; பாரீஸ் ஒலிம்பிக் நாளை இரவு பிரமாண்ட தொடக்க விழா.! செய்ன் நதியில் படகுகளில் வீரர்கள் அணிவகுப்பு

பாரீஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 5250 வீரர், 5250 வீராங்கனைகள் என மொத்தம் 10,500 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஒலிம்பிக் நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தொடங்குகிறது.

செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமான மைதானத்தில் தொடக்க விழா நடைபெறும் நிலையில் இந்த முறை வித்தியாசமாக ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரில் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகில் உள்ள செய்ன் நதிக்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வீரர்கள், கலைஞர்கள் 162 படகுகள் மூலம் செய்ன் நதியில் அழைத்து வரப்படுகின்றனர். ஆற்றில் படகுகள் மூலம் வீரர்கள் சுமார் 6 கிலா மீட்டர் தூரப்பாதையில் அழைத்து வரப்படுகின்றனர்.

இதில் அந்தந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர். கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளி விளக்கு, பாரம்பரிய நடனங்கள் என 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நதிக்கரையில் 63 பிரமாண்ட எல்டிஇ திரைகளில் தொடக்க விழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் நடத்துவதால் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவையொட்டி பாரீஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிட்ஸ்… பிட்ஸ்… பிட்ஸ்…

* கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்பால், சாஃப்ட்பால், கராத்தே ஆகிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டில் இடம் பெறவில்லை. இந்த ஆண்டின் முதல் முறையாக பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் நடைபெற உள்ளது. ஸ்டேட் டி பிரான்ஸ், ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

* 1924ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் திருவிழாவை பிரான்ஸ் நடத்துகிறது. லண்டனுக்கு பிறகு 3வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்தும் நாடு என்ற பெருமையையும் பாரீஸ் வசப்படுத்தியுள்ளது .

* ஒலிம்பிக் போட்டிக்காக செய்ன் நதியை 12,522 கோடி ரூபாய் செலவழித்து பிரான்ஸ் அரசு சுத்தப்படுத்தி உள்ளது.

* இந்தியாவில், தொடக்க விழாவை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் சேனலில் பார்க்கலாம், ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

The post உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா; பாரீஸ் ஒலிம்பிக் நாளை இரவு பிரமாண்ட தொடக்க விழா.! செய்ன் நதியில் படகுகளில் வீரர்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: