மறுமுனையில் நின்று ஷபாலி பேட்டிங்கை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும்: ஆட்டநாயகி ஸ்மிருதி மந்தனா பேட்டி

திருவனந்தபுரம்: இந்தியா-இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே 3-0 என இந்தியா தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், 4வது போட்டி திருவனந்தபுரத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 79, ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா தரப்பில் வைஷ்ணவி சர்மா, அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்,

‘‘பேட்டிங்கில் அசத்தலாக ஆடிய ஷபாலி, ஸ்மிருதிக்கு தான் இந்த வெற்றிக்கான பெருமை செல்ல வேண்டும். இருவருமே அபாரமாக பேட்டிங் ஆடிய நிலையில் நானும், ரிச்சாவும் போட்டியை நல்லபடியாக முடித்தோம். நாங்கள் பீல்டிங்கில் தவறுகளில் இருந்து முன்னேற தொடர்ந்து முயற்சிக்கிறோம்’’ என்றார். ஆட்டநாயகி மந்தனா கூறுகையில், ‘‘இந்த வருடம் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்ததால், அதில் இருந்து டி20 கிரிக்கெட்டில் நுழைவது சற்று கடினமாக இருந்தது. மனதளவில் கொஞ்சம் மாற்றங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இன்றைய வெற்றியில் எனது பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மறுமுனையில் ஷபாலி பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எப்போதும் கண்களுக்கு விருந்தாக இருக்கும். பவர்பிளேயில் பெரும்பாலான ஹிட்டிங்கில் அவர்தான் ஈடுபடுகிறார். அவர் நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார்.’’ என்றார்.
இந்த வெற்றி மூலம் 4-0 என இந்தியா முன்னிலை வகிக்க கடைசி போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

ஸ்மிருதி மந்தனா ரெக்கார்டு….
*ஒரே ஆண்டில் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் (1,703 ரன்கள்) என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார்.
* மகளிர் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். 10,868 ரன்களுடன் மித்தாலி ராஜ் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா தன்வசப்படுத்தினார்.
* சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை குறைந்த இன்னிங்சில் (281) எட்டிய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா தட்டிச் சென்றார். மித்தாலி ராஜ் 291 இன்னிங்சில் 10,000 ரன்கள் அடித்துள்ளார்.
* சர்வதேச டி.20யில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீராங்கனைகளில் கேப்டன் ஹர்மன்பிரீத்தை (78), மந்தனா (80) முந்தினார்.

Related Stories: