லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம். 37 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள், 75 டி.20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு சன்னியா அஷ்பக் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இமாத் வாசிம், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நிறைய யோசித்துவிட்டேன்.
கடந்த சில ஆண்டுகளாக தீர்க்கவே முடியாத தொடர்ச்சியான மோதல்கள் நடந்தேறியதால் வேறு வழியே இன்றி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். எங்கள் தனியுரிமையை அனைவரும் மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பழைய ஜோடி புகைப்படங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்க வேண்டும் என அனைவரையும் மனதார கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், எனது குழந்தைகளுக்கான ஒரு தந்தையின் கடமைகளைத் தொடர்ந்து முழுமையாகவும், பொறுப்புடனும் செய்வேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
சன்னியா அஷ்பக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில், ‘‘நான் ஆழ்ந்த வலியுடன் இதை எழுதுகிறேன். எனது வீடு சுக்குநூறாக உடைந்துவிட்டது. என் மூன்று குழந்தைகளும் தந்தையில்லாமல் தவிக்கின்றனர். அதில் 5 மாதக் குழந்தை இன்னும் தந்தையால் தூக்கப்படவே இல்லை. இது நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கதையே அல்ல. ஆனால் மௌனத்தை ஒருபோதும் பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ள நிலையில், அவரை திருமணம் செய்வதற்காக என் கணவர் இந்த முடிவை எடுத்துள்ளார்’’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
