ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2வது நாளாக காவலில் எடுத்தவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை: கைதானவர்களின் வாக்குமூலத்தை வைத்து ஆதாரங்களை திரட்டும் சைபர் கிரைம் போலீசார்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2வது நாளாக காவலில் எடுத்தவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கைதானவர்களின் வாக்குமூலத்தை வைத்து ஆதாரங்களை திரட்டுவதில் சைபர் கிரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன்னை பாலு, அருள், ஹரிகரன், ராமு என்ற வினோத் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் பட்டுவாடா குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனித்தனியாக இருந்த நபர்களை எவ்வாறு ஒருங்கிணைத்தனர் மற்றும் இந்த கொலையில் சம்பவ செந்தில் பங்கு என்ன என்பது குறித்து போலீசாருக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் ஹரிஹரனிடம் தீவிரமாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை வழக்கறிஞர் அருளை பெரம்பூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று, எங்கெங்கு நின்று அவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள், புழல் பகுதியில் எந்த இடத்தில் அடிக்கடி ஒன்று கூடினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அருள், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த அன்று பெரம்பூர் பகுதியில் எந்தெந்த இடத்தில் சுற்றித்திரிந்தார்கள் என்பது குறித்தும், கொலை செய்வதற்கு முன்பு பல நாட்கள் அடிக்கடி புழல் பகுதியில் எந்த இடத்தில் சந்தித்து பேசினார்கள் என்பது குறித்தும் தனிப்படை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று தனிப்படை போலீசார் பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதேபோன்று இந்த வழக்கில் பலரையும் ஒன்றிணைக்க காரணமாக இருந்த ஹரிஹரனிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ செந்தில் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த வழக்கில் மீதமுள்ள கேள்விகளுக்கு விடை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் ஒரு பாஜ பிரமுகரிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடி ஒருவருடன் கடந்த 1997ம் ஆண்டு தொடர்பில் இருந்ததாக கூறி முகப்பேரைச் சேர்ந்த பாஜ நெசவாளர் பிரிவு மாநிலச் செயலாளர் மின்ட் ரமேஷை கடந்த 2 தினங்களுக்கு முன்பு போலீசார் விசாரணைக்காக சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்தனர். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அவரது செல்போன் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவருக்கும் போலீசாரால் சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிக்கும் தற்போது தொடர்பில்லை என்பதும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், மின்ட் ரமேஷுக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்ததையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

* ஆந்திராவில் சீசிங் ராஜாவுக்கு வலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா என்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவில் அவரது 2வது மனைவி வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அவரை நெருங்கியதாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த சீசிங் ராஜா, காரில் தப்பிச் சென்றதாகவும், காரின் பதிவு எண்ணை வைத்து அவரை ஆந்திராவில் போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சீசிங் ராஜா கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வந்தவர். சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ஏ ப்ளஸ் ரவுடியாகவும் உள்ளார். இவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தென்சென்னை, புறநகர் மற்றும் பல்வேறு இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே சீசிங் ராஜா மீது சென்னை, ஆந்திர மாநில காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* சைபர் கிரைம் போலீசார் தீவிரம்
கைது செய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட செல்போன்களை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நபர்கள் கொடுக்கும் வாக்கு மூலமும், சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் எடுத்த தகவல்களும் ஒத்துப்போகின்றனவா என தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில் தனது கூட்டாளிகளுடன் பெரும்பாலும் வீடியோ கால், வாட்ஸ்அப் கால், இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் பேசியுள்ளார். இதனை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியுமா என்ற ரீதியிலும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2வது நாளாக காவலில் எடுத்தவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை: கைதானவர்களின் வாக்குமூலத்தை வைத்து ஆதாரங்களை திரட்டும் சைபர் கிரைம் போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: